ராஜபாளையத்தில் அதிக அளவு பூத்துக்குலுங்கும் மா மரங்கள்


ராஜபாளையத்தில் அதிக அளவு பூத்துக்குலுங்கும் மா மரங்கள்
x

10 ஆண்டுகளுக்கு பிறகு ராஜபாளையத்தில் அதிக அளவு மா மரங்கள் பூத்துக்குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

10 ஆண்டுகளுக்கு பிறகு ராஜபாளையத்தில் அதிக அளவு மா மரங்கள் பூத்துக்குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பூத்துக்குலுங்கும் மா மரங்கள்

ராஜபாளையம் - அய்யனார் ேகாவில் பகுதி, சாஸ்தா ேகாவில் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மா அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த மரங்கள் தற்போது பூக்க தொடங்கி உள்ளன.

ராஜபாளையம் பகுதியில் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. ஆதலால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மா மரங்கள் நன்கு பூக்கள் பூத்து உள்ளன. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா கூறியதாவது:- தோட்டக்கலை துறையினால் பருவத்தில் பயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை உரம் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். ஆகையால் ராஜபாளையம் வட்டார பகுதியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அருகே 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மா பயிர் செய்துள்ளனர். தற்போது மாமரங்களில் ஏராளமான பூக்கள் பூத்துள்ளது.

ஏல மார்க்கெட்

மா விளைச்சல் சமயங்களில் தனியார் கமிஷன் கடையில் ஏலம், விற்பனை என்ற பெயரில் மா விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. இதில் ஏல நேரத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ள இயலவில்லை.

ஆதலால் மற்ற மாவட்டத்தை போல ராஜபாளையத்தில் ஏல மார்க்கெட்டை ஏற்படுத்த வேளாண் வணிகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மா விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நியாயமான விலை கிடைக்கும். மா விவசாயத்தை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நல்ல விளைச்சல்

விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் மா மரங்களில் இந்த ஆண்டு பூக்கள் அதிக அளவில் பூத்துள்ளது. இதனால் சப்பட்டை, பஞ்சவர்ணம், ஆரா, கிளி மூக்கு போன்ற மாவிளச்சல் அதிகரிக்கும். தற்போது மா மரங்களில் பூக்கள் அதிகமாக பூத்துள்ளதால் காய்கள் அதிகமாக காய்க்கும். இன்னும் 3 மாதங்களில் மாங்காய்கள் நன்றாக விளையும். இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மா விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஏல மார்க்கெட்டை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story