100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தைப்புலி
100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தைப்புலி 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குய்யனூர் பிரிவில் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு 100 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணறு இருக்கிறது.
இந்த நிலையில் அந்த வழியாக நேற்று காலை சிலர் நடந்து சென்றபோது கிணற்றுக்குள் இருந்து உறுமல் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது உள்ளே சிறுத்தைப்புலி ஒன்று படுத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு காட்டுக்குள் இருந்து வெளியே வந்த சிறுத்தைப்புலி புதுக்குய்யனூர் பிரிவில் உள்ள மாணிக்கத்தின் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அப்போது இருட்டாக இருந்ததால் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பின்னர் வெளியே வரமுடியாமல் கிணற்றுக்குள் உருமியபடி தவித்துக்கொண்டிருந்தது.
திரண்ட பொதுமக்கள்
இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் கிணற்றில் இருந்து சிறுத்தைப்புலியை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கிரேனில் கூண்டை கட்டி உள்ளே கோழியை போட்டு கிணற்றின் உள்ளே இறக்கினார்கள். ஆனால் அந்த கூண்டுக்குள் சிறுத்தைப்புலி வரவில்லை. இதனால் தீயணைப்பு துறையினர் கிணற்றின் உள்ளே நாலாபுறமும் தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். எனினும் சிறுத்தைப்புலி கூண்டுக்குள் செல்லவில்லை.
கூண்டுக்குள் சிக்கியது
இதையடுத்து கூண்டுக்குள் உயிருடன் ஒரு ஆட்டை போட்டு மூடி மீண்டும் கிணற்றின் உள்ளே இறக்கினார்கள். ஆட்டை பார்த்ததும் சிறுத்தைப்புலி அதை பிடிக்க கூண்டுக்குள் பாய்ந்தது.
இதனால் சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்கிக்கொண்டது. உடனடியாக அங்கிருந்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் கூண்டை மேலே இழுத்தார்கள். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த வாகனத்தில் கூண்டை ஏற்றி சிறுத்தைப்புலியை தெங்குமரஹாடா வனப்பகுதியில் கொண்டு விட சென்றனர்.
10 மணி நேர போராட்டம்
சிறுத்தைப்புலியை கிணற்றில் இருந்து மீட்கும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் சிறுத்தைப்புலியை உயிருடன் மீட்டுள்ளனர்.
இதே கிணற்றில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தவறி விழுந்த கரடியை வனத்துறையினர் உயிருடன் மீட்டது குறிப்பிடத்தக்கதாகும்.