பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் 4 குட்டிகளை ஈன்ற சிறுத்தை -தொழிலாளர்கள் பீதி
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் 4 குட்டிகளை ஈன்ற சிறுத்தை -தொழிலாளர்கள் பீதி
பந்தலூர்
பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 2 மலை மாரியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தைகள் அடிக்கடி புகுந்து கோழி, வளர்ப்பு நாய்களையும் கொன்று வருகிறது. தொழிலாளர்களையும் துரத்துகிறது. இந்தநிலையில் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறித்து கொண்டிருந்த போது சிறுத்தை குட்டிகள் உறுமிக் கொண்டு இருந்தன. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 4 குட்டிகள் அங்கு கிடந்தன. மேலும் குட்டிகள் மட்டும் அங்கு கிடப்பதாலும் தாய் சிறுத்தை எந்த நேரத்திலும் இங்கு வரவாய்ப்பு உள்ளதாலும் தொழிலாளர்கள் அனைவரும் பீதி அடைந்ததோடு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அவர்கள் இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 சிறுத்தை குட்டிகள் மட்டுமே கிடந்தது. மற்ற 2 குட்டிகளை தாய் சிறுத்தை தூக்கிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மற்ற 2 குட்டிகளையும் வனத்துறையினர் மீட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.