விவசாயி வீட்டு மாடியில் கிடந்த சிறுத்தை தோல்
தேனி அருகே விவசாயி ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் சிறுத்தை தோல் காய வைக்கப்பட்டு இருந்தது. அதனை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுத்தை தோல்
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சி அம்மாபட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் சிறுத்தை தோல் கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.
சிறுத்தை தோல் கிடைப்பதாக கூறப்பட்ட வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு வெளிப்பகுதியில் இருந்தது. அதன் வழியாக வனத்துறையினர் மொட்டைமாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு சிறுத்தையின் தோல் தரையில் விரித்து வெயிலில் காய வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதன் மீது மஞ்சள் பூசப்பட்டிருந்தது.
வேட்டையாடப்பட்டதா?
அந்த தோலை வனத்துறையினர் கைப்பற்றி தேனி வனச்சரகர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். சிறுத்தை தோல் புதிதாக இருந்ததால், அது சமீபத்தில் வேட்டையாடப்பட்டு இருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.
இதுகுறித்து தேனி வனச்சரகர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, "தற்போது சிறுத்தை தோல் எடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் துரைப்பாண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறோம். அவர் பிடிபட்டால் தான், சிறுத்தை தோல் எப்படி அங்கு வந்தது என தெரிய வரும்" என்றார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.