திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தைப்புலி


திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தைப்புலி
x

சிறுத்தைப்புலி

ஈரோடு

திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தைப்புலியால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

திம்பம் மலைப்பாதை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்து உள்ளதால், வனவிலங்குகள் அடிக்கடி இந்த மலைப்பாதையை கடந்து செல்வது தொடர்கதையாகி வருகிறது.

சாலையில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி

இந்தநிலையில் நேற்று காலை சுமார் 5.30 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று திம்பம் மலைப்பாதையில் உள்ள 24-வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு வந்து உள்ளது.

பின்னர் அந்த சிறுத்தைப்புலி அங்குள்ள சாலையில் நடந்து சென்றது. மேலும் மலைப்பாதையில் உள்ள தடுப்பு சுவரில் ஏறிய சிறுத்தைப்புலி சுற்றும் முற்றும் பார்த்து உள்ளது. சிறிது நேரம் தடுப்பு சுவரிலேயே நின்று கொண்டிருந்த சிறுத்தைப்புலி, பிறகு வனப்பகுதிக்குள் தாவி சென்றது.

வாகன ஓட்டிகள் பீதி

சாலையில் உலா வந்த சிறுத்தைப்புலியை கண்ட தும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். உடனே அவர்கள் தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களின் சத்தம் மற்றும் தொந்தரவு இல்லாததால் வனவிலங்குகள் எந்தவித இடையூறுமின்றி திம்பம் மலைப்பாதையை அதிக அளவில் கடந்து செல்கின்றன. எனவே திம்பம் மலைப்பாதை வழியாக காலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாகவும், மிகவும் கவனத்துடனும் இயக்க வேண்டும்,' என அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story