வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை; நாயை துரத்தியதால் பரபரப்பு


வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை; நாயை துரத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, நாயை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, நாயை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

சிறுத்தை புகுந்தது

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையத்திற்கு பிரதான சாலை செல்கிறது. அந்த சாலையில் அரவேனுவை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனுவுக்கு செல்லும் சாலை உள்ளது. அங்கு பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் தேயிலை தோட்டம் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அங்குள்ள ஒருவரது வீட்டின் வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. பின்னர் வீட்டில் காவலுக்கு இருந்த வளர்ப்பு நாயை துரத்தியது. இதனால் நாய் சிறுத்தையை கண்டு குரைத்தவாறு அங்கும், இங்குமாக ஓடியது.

பொதுமக்கள் அச்சம்

நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக பார்த்த போது, அங்கு சிறுத்தை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வீட்டு வளாகத்தில் உள்ள மின்விளக்குகளை ஒளிர செய்து, வீட்டிற்குள் இருந்தவாறு சத்தம் போட்டு சிறுத்தையை விரட்டினார். இதனால் சிறுத்தை சுவரை தாண்டி குதித்து, அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனால் பணிக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்பும் தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். கடந்த வாரம் இதே சாலையில் நள்ளிரவில் 2 கருஞ் சிறுத்தைகள், 2 சிறுத்தைகள் உலா வந்தன. மேலும் தொடர்ந்து சிறுத்தைகள் உலா வருவதால், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story