வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை
ஊட்டியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஊட்டி,
ஊட்டியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வீட்டுக்குள் புகுந்தது
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப நாட்களாக குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 28-ந் தேதி ஊட்டியில் உள்ள தமிழகம் சாலையில் சிறுத்தை நடமாடியது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை அலேக்காக கவ்வி சென்றது. சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர், வளர்ப்பு நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
பொதுமக்கள் பீதி
அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்ததில், சிறுத்தை நாயை கவ்வி சென்றது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 6 மாதமாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. பலர் நேரிலும் பார்த்து உள்ளார். இருப்பினும், சிறுத்தையை பிடிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஊட்டி எச்.பி.எப் பகுதியில் பசுமாட்டை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க, 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் எச்.பி.எப். பகுதியில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.