தற்காலிக கடைகள் அமைக்க உரிமம் பெற வேண்டும்
தீபாவளி பண்டிகையையொட்டி உணவு பொருட்கள் விற்பனை செய்ய தற்காலிக கடைகள் அமைக்க உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி உணவு பொருட்கள் விற்பனை செய்ய தற்காலிக கடைகள் அமைக்க உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது தற்காலிக ஸ்வீட் கடைகள் அமைக்க உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
மேலும் இனிப்பு, கார உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு வினியோகம் செய்யவேண்டும்.
உரிமம் பெற வேண்டும்
வணிகர்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவுசெய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக
https://foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் உரிமம் பெற்று தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும். திறந்தவெளிகளில் உணவு பொருட்கள் தயார் செய்யக் கூடாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி அவசியம்
தீபத்திற்கு பயன்படுத்துவது போன்ற வாசமுள்ள எண்ணெய் மற்றும் நெய் பாக்கெட்டுகளை உணவுபொருள் தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. ஒருமுறைப் பயன்படுத்தி சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுபொருட்களில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுபொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், ஊட்டச்சத்து விவரம் அவசியம் குறிப்பிட வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிதொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பணியாளர்கள் கையுறை, முடிக்கவசம் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும். அனைத்துப் பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
பொதுமக்களும், பண்டிகைகாலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவுபெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும்.பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலக வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட வழிமுறைகளை கடைப்படிக்காத உணவு விற்பனையாளர்கள் ஆய்வு நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டத்தின் படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.