யானைகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே வேதனை வாழ்க்கை


யானைகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே வேதனை வாழ்க்கை
x

யானைகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே வேதனையான வாழ்க்கை வாழ்கிறோம் என்று தெ.கோம்பை கிராம மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.

திண்டுக்கல்

இயற்கை அளித்த அற்புத கொடைகளில் மலைகளும் ஒன்றாகும். உயிர்கள் வாழ்வதற்கு காற்று, மழைநீரை அள்ளித்தரும் மலைகளை 3 பக்கமும் அரணாக அமைய பெற்றது திண்டுக்கல் மாவட்டம். எனவே மலைகளை ஒட்டி அமைந்த கிராமங்கள் ஏராளமாக உள்ளன.

கோம்பை

பசுமையின் குளிர் வெப்பத்தை இதமாக மாற்ற, மூலிகை வாசனையில் குழைத்த காற்று மேனியை வருடும் மலையடிவார கிராமங்களில் வாழ்வது ஒருவித வரமே. தென்றலின் தாலாட்டில் இயற்கை அன்னையின் மடியில் அமைந்த கிராமங்களில் தெ.கோம்பையும் ஒன்றாகும்.

வானை முட்டும் மலைகள் மூன்று திசைகளிலும் எழுந்து நிற்க, அதன் நடுவே தெ.கோம்பை அமைந்துள்ளது. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பண்ணைப்பட்டியை அடுத்து தெ.கோம்பை கிராமம் உள்ளது. பசுமை சூழ்ந்த தெ.கோம்பையில் சுமார் 100 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயம்

இந்த கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழில் ஆகும். மா, தென்னை, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். ஊரில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள அணை, விவசாயம் மற்றும் குடிநீரின் ஆதாரமாக திகழ்கிறது.

இங்கு விளையும் தேங்காய், மாங்காய், வாழைக்காய் பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சுட்டெரிக்கும் கோடையிலும் அணையில் ஓரளவு தண்ணீர் இருப்பதால், விவசாயத்தில் கிராம மக்கள் முழுமூச்சாக ஈடுபடுகின்றனர். உழைப்பால் பயிர்கள் நன்றாக விளைச்சல் அடைந்தாலும், அறுவடை காலம் வரை அல்லல்படும் நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

வனவிலங்குகள் தொல்லை

விவசாயிகளின் நிம்மதிக்கு உலை வைப்பது வனவிலங்குகளே. இந்த கிராமத்துக்கு அருகே இருக்கும் மலையில் யானைகள், காட்டெருமைகள், கரடி, சிறுத்தைகள், காட்டு பன்றிகள் என அனைத்து வகை விலங்குகளும் உள்ளன. மலையடிவாரத்தில் இருக்கும் அணைக்கு தாகம் தீர்க்க வரும் விலங்குகள் விளைநிலங்களுக்கு உள்ளே புகுந்து விடுகின்றன.

இதில் காட்டு யானைகளை பொறுத்தவரை குட்டிகளுடன் கூட்டமாக வலம் வருகின்றன. அவை தென்னை, வாழை தோட்டங்களுக்குள் புகுந்து துவம்சம் செய்து விடுகின்றன. மேலும் இதுவரை வனத்துறை ஊழியர் உள்பட 3 பேரை யானைகள் தாக்கி இருப்பதால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

யானைகள் முகாம்

கோடைகாலம் மட்டுமின்றி குளிர்காலத்திலும் யானைகள் கூட்டம் சுற்றித்திரிவது வழக்கமாக உள்ளது. அந்த பகுதியில் குட்டிகளுடன் 5 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் காலை, மாலை நேரத்தில் விளைபயிர்களை நாசம் செய்வதோடு, இரவில் ஊருக்குள் நடமாடுவதால் அச்சத்தின் உச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர்.

இதுதவிர சிறுத்தை அடிக்கடி கால்நடைகளை கொன்று தின்று விடுகின்றது. இதனால் தெ.கோம்பை மக்கள் வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே வேதனையுடன் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

நிம்மதியாக தூங்க முடியவில்லை

முத்துக்கண்ணு:- எங்கள் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கரும்பு அதிக அளவில் பயிரிட்டோம். காட்டு யானைகள் தொல்லை நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே இருந்தது. கரும்பு பயிரிடுவதால் யானைகள் வருவதாக கூறினர். இதனால் கரும்பு பயிரிடுவதை நிறுத்திவிட்டு, பிற பயிர்களை பயிரிடுகிறோம். ஆனால் காட்டு யானைகளின் தொல்லை மட்டும் குறையவில்லை. மாலை 5 மணிக்கு மேல் காலை 7 மணி வரை யானைகள் நடமாட்டம் இருக்கிறது. தினமும் இரவு நிம்மதியாக தூங்க முடியவில்லை. வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியே வருவதை தடுக்க வேண்டும்.

பிச்சைக்கண்ணு:- முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை தான் யானைகள் காட்டை விட்டு வெளியே வரும். கடந்த சில ஆண்டுகளாக யானைகள் எப்போது வருமோ? என்று அச்சத்திலேயே வாழ்கிறோம். எங்கள் கிராமத்தை சுற்றி தான் யானைகள் முகாமிடுகின்றன. தற்போதும் கடந்த 3 நாட்களாக அணைக்கு அருகே உள்ள முத்துப்பாண்டி கோவில் பகுதியில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலாவருகிறது. கோவிலுக்கு சாமி கும்பிட சென்றவர்களை யானைகள் துரத்தி இருக்கின்றன. யானைகள் வருவதை தடுக்க அகழிகள், சோலார் வேலிகள் அமைக்க வேண்டும். சிறுத்தை நடமாட்டமும் உள்ளது. ஆடுகள், மாடுகளை அடித்து கொன்று இழுத்து சென்று விடுகின்றன.

செல்போன் சேவை

பள்ளி மாணவர் விஜயராகவன்:- கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 7 மணிக்கு கடை முன்பாக யானைகள் சென்றன. அதை பார்க்கவே மிகவும் பயமாக இருந்ததால் வீட்டுக்குள் ஓடிவிட்டேன். காலையில் பள்ளிக்கு செல்லும் போதும், திரும்பி வரும்போதும் பயமாக தான் இருக்கிறது. இதுபற்றி தகவல் தெரிவிக்க முயன்றால் செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை.

செல்லபாண்டி:- தெ.கோம்பை கிராமத்தில் யானைகள், சிறுத்தை தொல்லை அதிகமாகி கொண்டே இருக்கிறது. மாலை நேரத்தில் யானைகள் கிராமத்தை சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறோம். செல்போன் சிக்னல் கிடைக்காது என்பதால், யானை நடமாட்டம் பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க முடியாது. அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் கூட ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செல்போன் இருக்கு... சிக்னல் இல்லை

தெ.கோம்பை கிராமத்தில் பெரும்பாலான மக்கள் செல்போன் வைத்து இருக்கின்றனர். அதிலும் ஒருசிலர் 5ஜி சேவை செல்போன் வைத்து உள்ளனர். ஆனால் அங்கு எந்த நிறுவனத்தின் சிக்னலும் கிடைப்பதில்லை. இதனால் 5ஜி செல்போன் வைத்து இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். இரவில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், வெளியே சென்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை என்று புலம்புகின்றனர்.

மேலும் வனத்துறையினரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதற்கெல்லாம் மேல் மகப்பேறு, திடீர் உடல்நலக்குறைவுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் ஆம்புலன்சை கூட அழைக்க முடியவில்லை. அதுபோன்ற நேரத்தில் யானைகள் நடமாட்டத்துக்கு இடையே உயிரை பணயம் வைத்து ஊருக்கு வெளியே சுமார் 2 கி.மீ. தூரம் சென்று செல்போனில் தகவல் தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

இந்த கிராமத்துக்கு பஸ், மின்சாரம், குடிநீர், சாலை உள்பட அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆனால் யானைகளின் நடமாட்டத்துக்கு நடுவே வசிக்கும் இவர்கள் அவசர தேவைக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் எல்லாம் இருந்தும் தனித்தீவில் வசிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக கூறினர். எனவே தெ.கோம்பை பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என்பது கிராம மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக இருக்கிறது.


Next Story