கரும்பு லோடு தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்தது: கடலூரில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் நிறுத்தம் பயணிகள் அவதி


கரும்பு லோடு தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்தது:  கடலூரில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் நிறுத்தம்  பயணிகள் அவதி
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டரில் ஏற்றி வந்த கரும்பு லோடு தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்ததால் கடலூரில் 1 மணி நேரம் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

கடலூர்

திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.38 மணிக்கு வருவதற்கு பதிலாக தாமதமாக 1.58 மணிக்கு வந்தடைந்தது.அதையடுத்து ரெயில் புறப்பட தயாரான போது, நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் டிப்ரா கேட்டை (கிறிஸ்தவ தேவாலயம் அருகில்) ஒட்டி சாலையில் கரும்பு லோடு ஏற்றிச்சென்ற டிராக்டர் சாய்ந்து, தண்டவாளத்தில் கரும்புகள் விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பயணிகள் அவதி

உடனே சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ரெயில் நிலையத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக பாட்டில்களுடன் இறங்கிய பயணிகள் அங்குள்ள குழாயில் தண்ணீர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சிலர் அங்குள்ள கடையில் இருந்து தண்ணீர் பாட்டில்களை வாங்கினர். அவசர வேலையின் காரணமாக சென்றவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையில் தண்டவாளத்தில் கிடந்த கரும்புகளை ஊழியர்கள் அகற்றி, தண்டவாளத்தை சரி செய்தனர். அதன்பிறகு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 2.48 மணி அளவில் புறப்பட்டு, சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு சென்றது. மேலும் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரெயில் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 3 மணிக்கு வரும். ஆனால் நேற்று இந்த ரெயில் 50 நிமிடம் தாமதமாக மாலை 3.50 மணிக்கு வந்தது.

(பாக்ஸ்) பராமரிப்பு பணியால் தாமதமாக செல்லும் செந்தூர் ரெயில்

புதுச்சத்திரம் ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக தண்டவாளத்தில் உள்ள ஜல்லிகள் சரியாக உள்ளதா? என்று ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜல்லிகள் குறைவாக உள்ள பகுதியில் அதிகரித்தும், சமப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் அதிகாலை 3.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது. இதனால் புதுச்சத்திரம் ரெயில் நிலையம் வழியாக சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடம் நின்று தாமதமாக செல்கிறது. இந்த தண்டவாள பராமரிப்பு பணிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை நடைபெறும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story