உள்ளூர் திட்டக்குழு அமைக்க வேண்டும்


உள்ளூர் திட்டக்குழு அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் கட்டிட அனுமதி வழங்கும் வகையில் உள்ளூர் திட்டக்குழுவை அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் கட்டிட அனுமதி வழங்கும் வகையில் உள்ளூர் திட்டக்குழுவை அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

அதிகாரம் இல்லை

ஊட்டி நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்.

கவுன்சிலர்கள் ஜார்ஜ், கீதா, நாகமணி, நாகராஜ்:- ஊட்டி நகராட்சியில் மீண்டும் உள்ளூர் திட்டக்குழு அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஊட்டி நகராட்சியில் மட்டும் கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் இல்லை. இது உள்ளாட்சி அதிகாரத்தை பறிக்கும் செயல். இதனால் மீண்டும் உள்ளூர் திட்டக்குழு ஏற்படுத்த அவசர தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றனர்.

துணை தலைவர் ரவிகுமார்:- ஊட்டி நகராட்சியில் 2016-ம் ஆண்டு வரை உள்ளூர் திட்டக்குழு செயல்பட்டு வந்தது. கட்டிட அனுமதியை இந்த குழுவினரே வழங்கினர். 1996-ம் ஆண்டு நகராட்சியே 1,500 சதுர அடி பரப்பளவில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கலாம் என இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நீலகிரி கலெக்டர் தான் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மாற்றி அமைக்கப்பட்டது.

மாஸ்டர் பிளான் சட்டம்

மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் பெறப்பட்ட பிளான்கள் நகராட்சி கூட்டத்தில் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்க வேண்டும். குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகளில் இந்த நடைமுறை உள்ளது. இதுகுறித்து அனைத்து கவுன்சிலர்களும் கலெக்டரை சந்தித்து முறையிடலாம். ஊட்டி நகராட்சியில் மாஸ்டர் பிளான் சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பே நகராட்சியில் உள்ள நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. ஏழை மக்கள் வீடு கட்ட 3 துறைகளின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. நகராட்சியின் அனுமதி போதுமானது. இதனால், மாஸ்டர் பிளான் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

கவுன்சிலர்கள் முஸ்தபா, குமார், நாகமணி:-

ஊட்டி நகராட்சிக்கு சுற்றுலா மூலம் எவ்வித வருவாயும் கிடைப்பதில்லை. நகராட்சி வசமிருந்த சிறுவர் பூங்கா, பஸ் நிலையம் கைவிட்டு போயுள்ளன. இந்தநிலையில் பட்பயர் பகுதியில் 5 ஏக்கர் நிலம் மினி டைடல் பார்க் அமைக்க நகராட்சி நிலம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

நகராட்சி முடிவு செய்யும்

ஆணையாளர் காந்திராஜன்:- கவுன்சிலர்கள் வலியுறுத்தியதின் பேரில் மினி டைடல் பார்க் அமைக்க நகராட்சி நிலம் வழங்கும் தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது. ஊட்டியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் வாகன நிறுத்துமிடங்கள் செயல்பட்டு வருகின்றன. சீசன் நேரங்களில் தனியார் வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்துள்ளனர்.

எனவே, தனியார் வாகன நிறுத்தம் அமைக்க விருப்பப்பட்டால், அந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் பார்வையிட்டு, ஒவ்வொரு வாகனத்திற்கான கட்டணத்தை நகராட்சி நிர்வாகமே முடிவு செய்யும்.



Next Story