கடலூர் அருகே கடல் வழியாக கடத்தல்?நடுக்கடலில் மிதந்த மரக்கட்டையை படகில் கட்டி இழுத்து வந்த மீனவர்கள்போலீசார் கைப்பற்றி விசாரணை


கடலூர் அருகே கடல் வழியாக கடத்தல்?நடுக்கடலில் மிதந்த மரக்கட்டையை படகில் கட்டி இழுத்து வந்த மீனவர்கள்போலீசார் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே, நடுக்கடலில் மிதந்து வந்த மரக்கட்டையை கடலூர் மீனவர்கள் படகில் கட்டி இழுத்து வந்தனர். இதை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்


கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது, செம்மரக் கட்டையை படகில் கட்டி இழுத்து வந்து உப்பனாற்று கரையோரத்தில் போட்டு வைத்துள்ளதாக தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் தேடினர். ஆனால் மரக்கட்டை கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் போலீசார் தேடினர். அப்போது சுனாமிநகர் பகுதியில் உப்பனாறு கரையோரம் ஒரு படகில் 10 அடி நீள மரக்கட்டை கட்டப்பட்டு கிடந்தது.

இதற்கிடையே கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மரக்கட்டையை பார்வையிட்டனர். ஆனால் அது எந்தவகையான மரக்கட்டை என்பது தெரியவில்லை.

மீனவர்களிடம் விசாரணை

இதையடுத்து இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது மேற்பார்வையில் வன காவலர் தங்கமணி சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அவர், அந்த மரக்கட்டையை பார்வையிட்டு, அது ரோஸ் வுட் என்றும், இந்த வகை மரங்கள் கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதற்கும், மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது என்றும், 10 அடி நீளமுள்ள இந்த மரத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அந்த மரக்கட்டையை கொண்டு வந்த மீனவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கடலூர் கடலில் இருந்து 4 நாட்டிகல் மைல் தூரம் மீன்பிடித்து கொண்டிருந்த போது, ஒரு மரக்கட்டை மிதந்து வந்ததாகவும், அதை கரைக்கு படகில் கட்டி இழுத்து வந்ததாகவும் தெரிவித்தனர். அதையடுத்து அந்த மரக்கட்டையை கைப்பற்றிய போலீசார், அதை கொண்டு வந்த மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல்?

கடல்வழியாக மரக்கட்டைகளை கடத்தி இருக்கலாம் என்றும், அதில் ஒரு மரக்கட்டை தவறி கடலில் விழுந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story