வேடசந்தூர் அருகே சுற்றுலா பஸ் மீது மோதி உருக்குலைந்த லாரி


வேடசந்தூர் அருகே சுற்றுலா பஸ் மீது மோதி உருக்குலைந்த லாரி
x
தினத்தந்தி 23 Sept 2023 3:00 AM IST (Updated: 23 Sept 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே சுற்றுலா பஸ் மீது மோதி லாரி உருக்குலைந்தது.

திண்டுக்கல்

பெங்களூருவில் இருந்து சுற்றுலா பஸ் ஒன்று 16 பேருடன் கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை மைசூருவை சேர்ந்த நசுருல்லா (வயது 40) ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் உள்ள கருக்காம்பட்டி பகுதியில் நேற்று அதிகாலை 5.30 அளவில் சுற்றுலா பஸ் வந்தது.

அப்போது பின்னால் டிப்பர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை கரூர் லாலாபேட்டையை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (39) ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுலா பஸ்சின் பின்பகுதியில் லாரி மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி உருக்குலைந்தது. பஸ்சின் பின்பகுதியும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் லாரி டிரைவரும் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுற்றுலா பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story