மோட்டார் சைக்கிளை திருடிய லாரி டிரைவர்
மார்த்தாண்டத்தில் விற்பனைக்கு வைத்திருந்மோட்டார் சைக்கிளை திருடிய லாரி டிரைவர். உரிமையாளர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது47). இவர் வெட்டுமணியில் பழைய மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் மோகன்ராஜ் கடையில் இருந்த போது ஒரு வாலிபர் வந்தார். அவர் திடீரென கடையின் வெளியே விற்பனைக்கு வைத்திருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து திருடி ஓட்டி சென்றார்.
இதைப் பார்த்த மோகன்ராஜ் சத்தம் போட்டார். ஆனால் அந்த வாலிபர் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.
உடனே மோகன்ராஜ் அங்கிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபரை பின்தொடர்ந்து வேகமாக துரத்தி சென்றார். சிறிது தூரம் சென்றதும் அவரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபரை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பளுகல் மருதன்விளை கருமானாரை சேர்ந்த சிமியோன் (23), லாரி டிரைவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ்பாபு வழக்குப்பதிவு செய்து சிமியோனை கைது செய்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையில் விற்பனைக்கு வைத்திருந்த மோட்டார் சைக்கிளை பட்டப் பகலில் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.