லாரி-லோடு ஆட்டோ மோதி, ரெயில் தண்டவாளத்தில் விழுந்தது; 2 டிரைவர்கள் படுகாயம்


லாரி-லோடு ஆட்டோ மோதி,  ரெயில் தண்டவாளத்தில் விழுந்தது; 2 டிரைவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புளியரை ‘எஸ்’ வளைவு மலைப்பகுதியில் லாரியும், லோடு ஆட்டோவும் மோதியதில் அருகில் உள்ள பள்ளத்தில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் விழுந்தன. இதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

புளியரை 'எஸ்' வளைவு மலைப்பகுதியில் லாரியும், லோடு ஆட்டோவும் மோதியதில் அருகில் உள்ள பள்ளத்தில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் விழுந்தன. இதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

லாரி-லோடு ஆட்டோ மோதல்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக- கேரள எல்லையான புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் ஆபத்தான 'எஸ்' வளைவு உள்ளது.

அந்த வழியாக நேற்று மாலையில் கேரள மாநிலத்தில் சிமெண்டு லோடு இறக்கி விட்டு தமிழகத்துக்கு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவில் கொடை விழாவுக்கு வாடகை பாத்திரங்களை ஏற்றிய லோடு ஆட்டோ சென்றது.

புளியரை 'எஸ்' வளைவு பகுதியில் சென்றபோது, லாரியும், லோடு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைதடுமாறிய லாரியும், லோடு ஆட்டோவும் மலையில் இருந்து சுமார் 40 அடி ஆழ பள்ளத்துக்குள் பாய்ந்தது. அந்த வழியாக மலையில் அமைக்கப்பட்ட செங்கோட்டை- கொல்லம் இடையிலான ரெயில் தண்டவாளத்தில் லாரியும், லோடு ஆட்டோவும் விழுந்தன.

2 டிரைவர்கள் படுகாயம்

இந்த விபத்தில் லாரி டிரைவரான கரூர் மாவட்டம் குளத்தூர் சிந்தாமணிப்பட்டியைச் சேர்ந்த பிச்சையா மகன் வையாபுரி (வயது 36), லோடு ஆட்டோ டிரைவரான செங்கோட்டை அருகே கற்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் (40) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த 2 டிரைவர்களையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ரெயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரி, லோடு ஆட்டோ ஆகியவற்றை கிரேன் மூலம் மீட்கும் பணி நடந்தது. விபத்து நிகழ்ந்தபோது ரெயில்வே தண்டவாளம் வழியாக ரெயில் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story