ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி மோதி மாணவன்-மாணவி படுகாயம்
ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரி மோதி மாணவனும், மாணவியும் படுகாயம் அடைந்தனர். கிராம மக்கள் போராட்டத்தால் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.
காரியாபட்டி,
ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரி மோதி மாணவனும், மாணவியும் படுகாயம் அடைந்தனர். கிராம மக்கள் போராட்டத்தால் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.
லாரி மோதியது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவனும், மாணவியும் காரியாபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இ்ந்தநிலையில் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில் இருந்து ஆவியூர் பஸ் நிறுத்ததிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, கிரஷரில் இருந்து ஜல்லிகற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவா்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவனும், மாணவியும் படுகாயம் அடைந்தனர்.
சாலை மறியல்
உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருவதால் ஆத்திரமடைந்த கீழ உப்பிலிக்குண்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் செயல்பட்டு வரும் கிரஷரை உடனடியாக மூட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர்கள், மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குவாரிக்கு சீல்
அருப்புக்கோட்டை துணை சூப்பிரண்டு காரட்கருன், காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக கிரஷர் குவாரியை மூட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கிரஷர் குவாரிக்கு சீல் வைத்து மூடப்பட்டது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.