கொடைரோடு அருகே நடுரோட்டில் கவிழ்ந்த முட்டை லாரி
கொடைரோடு அருகே முட்டை ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
கொடைரோடு அருகே, முட்டை ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
முட்டை லாரி
நாமக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஒரு லாரி, முட்டைகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி சென்றது. அந்த லாரியை, நாமக்கல்லை சேர்ந்த ரவி (வயது 42) ஓட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில், ஜல்லிப்பட்டி பிரிவு பகுதியில் நள்ளிரவு அந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தறிகெட்டு ஓடியது.
ஒரு கட்டத்தில் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் ஏற்றி வரப்பட்ட முட்டைகள் சாலையில் விழுந்து உடைந்து நாசமாகின. மேலும் சாலையில் உடைந்த முட்டைகள் ஆறாக ஓடியது. லாரியை ஓட்டி வந்த ரவிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
ஜல்லிப்பட்டி பிரிவில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால் வாகனங்கள் ஒருவழி பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன. இதற்கிடையே முட்டை லாரி கவிழ்ந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்று வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது.
இந்த லாரியில் சுமார் 2 லட்சம் முட்டைகள் கொண்டு வரப்பட்டதாகவும், அதில் 15 ஆயிரம் முட்டைகள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு உடையாத முட்டைகள் அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.