வடலூரில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி 3 பேருக்கு தீவிர சிகிச்சை
வடலூரில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூரில் இருசக்கர வாகன மெக்கானிக் சங்க கூட்டம் நேற்று காலையில் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காட்டுமன்னார்கோவில் ஞானவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பாரி(வயது 42), கலியபெருமாள் மகன் சுரேஷ்குமார்(40), தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மெயின்ரோட்டை சேர்ந்த இளங்கோவன் மகன் சுரேஷ்குமார்(42) ஆகியோர் வடலூருக்கு வந்தனர்.
இவர்கள் 3 பேரும் அருகில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக பண்ருட்டி-வடலூர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களுக்கு முன்னால் வடலூர் ஆபத்தாரணபுரம் அரிசி ஆலை தெருவை சேர்ந்த கணேசன்(63) மற்றும் 60 வயதுடைய ஒரு பெண்ணும் நடந்து சென்றனர்.
2 பேர் பலி
வடலூர் ஸ்டேட் வங்கி அருகில் சாலையோரமாக சென்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி 5 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் பாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இ.சுரேஷ்குமாா், க.சுரேஷ்குமார், கணேசன் மற்றும் 60 வயதுடைய பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 பேருக்கு தீவிர சிகிச்சை
கணேசன் உள்ளிட்ட 3 பேருக்கும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து காரணமாக வடலூரில் நடைபெற இருந்த இருசக்கர வாகன மெக்கானிக் சங்க கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.