திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கர்ப்பிணி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
பயனாளிகள்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் அறந்தாங்கியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு வீடுகள் தலா ரூ.1 லட்சம் வீதம் பெறப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தம் வேண்டும் என அதிகாரிகள் கூறுவதால், தங்களால் பணம் செலுத்துவதற்கு வசதி இல்லை எனவும், ஏற்கனவே அறிவித்த விலையில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும் என பயனாளிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
கர்ப்பிணி மனு
இதேபோல அறந்தாங்கி அருகே சிலட்டூரை சேர்ந்த ஜெகதீஸ்வரி (வயது 29), தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் கணினி மையத்தில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். எங்களது வீட்டில் திருமணத்திற்கு சம்மதித்தனர். ஆனால் அவரது வீட்டில் சம்மதிக்கவில்லை. இதற்கிடையில் அவர் மலேசியா சென்றார். அங்கிருந்து என்னை தொடர்பு கொண்டு மலேசியா வரும்படி வற்புறுத்தினார்.
அதனால் நானும் கடந்த 2022-ம் ஆண்டு மலேசியா சென்று வந்தேன். நான் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளேன். என்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி எனது காதலனிடம் கூறியதற்கு அவர் மறுத்துவிட்டார். அவரது வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காதலன் என்னை திருமணம் செய்து வாழ வைக்க வேண்டும். இல்லையெனில் என்னை ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இந்து முன்னணியினர்
தென்னிலைப்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவர் மனு கொடுக்க வந்தபோது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மன்னர் சிலை அருகே திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தென்னிலைப்பட்டியில் சாலை வசதி வேண்டும், பூட்டி கிடக்கும் அம்மன் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயானம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார். அவரை கலெக்டரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருவதாகவும், அந்த சிலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் மெர்சி ரம்யா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் பதில் அனுப்பப்படும் என கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மொத்தம் 322 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். கூட்டத்தில் 23 பயனாளிகளுக்கு ரூ.4,47,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.