நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த காதல் ஜோடி


தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் நீர்வீழ்ச்சியில் காதல் ஜோடி தவறி விழுந்தது. இதில் இளம்பெண் கரையேறினார். வாலிபர் கதி என்ன? என்பது தெரியவில்லை.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் நீர்வீழ்ச்சியில் காதல் ஜோடி தவறி விழுந்தது. இதில் இளம்பெண் கரையேறினார். வாலிபர் கதி என்ன? என்பது தெரியவில்லை.

காதல் ஜோடி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி உள்ளது. தனியார் எஸ்டேட் பகுதியில் உள்ளதால், அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி நேற்று மதியம் 2 மணியளவில் கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சாஹர்(வயது 21), இருகூர் பகுதியை சேர்ந்த தனது காதலியான 19 வயது கல்லூரி மாணவியுடன் மோட்டார் சைக்கிளில் பிர்லா நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.

அங்கு நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென சாஹர் தண்ணீரில் தவறி விழுந்தார். அவரை கை கொடுத்து காப்பாற்ற கல்லூரி மாணவி முயன்றார். ஆனால் அவரும் தண்ணீரில் விழுந்தார்.

சுழலில் சிக்கினார்

இதைத்தொர்ந்து 2 பேரும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் கல்லூரி மாணவி பாறையை பிடித்துக்கொண்டு உயிர் தப்பினார். ஆனால் சாஹர், நீர்வீழ்ச்சி தடாகத்தில் உள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

தேடும் பணி

இதையடுத்து தண்ணீரில் இருந்து வெளியே தப்பி வந்த கல்லூரி மாணவி, அந்த பகுதியை சேர்ந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய சாஹரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. இரவு நேரம் தொடங்கியதால், நேற்று ேதடும் பணி நிறுத்தப்பட்டு, இன்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் தொடங்க உள்ளது. அப்போது பிர்லா நீர்வீழ்ச்சிக்கு நீரார் அணையில் இருந்து டனல் வழியாக வரும் தண்ணீரை நிறுத்தி அவரை தேடும் பணி நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story