காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்


காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
x

தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு அரியலூரை சேர்ந்த காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

தஞ்சாவூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா மணப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு அலங்கார வேலை செய்து வருகிறார். இவரும், அதே ஊரைச்சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியான திவ்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவருடைய பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 21-ந் தேதி திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.


பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

இந்தநிலையில் பாதுகாப்பு கேட்டு திவ்யா, தனது காதல் கணவருடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் எனது கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து வந்தேன். இது எனது பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இந்த நிலையில் எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை

இந்த புகாரின் பேரில் இருவரின் பெற்றோரையும் போலீசார் வருமாறு கூறியிருந்தனர். ஆனால் ரமேஷ் தரப்பில் இருந்து யாரும் வரவில்லை. திவ்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மட்டுமே வந்து இருந்தனர். அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியபோது தான் மேஜர் என்பதால் தனது காதல் கணவருடன்தான் செல்வேன் என்று திவ்யா கூறினார். இதனையடுத்து திவ்யாவின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்ட போலீசார், காதல் திருமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.



Next Story