மயக்க ஊசி செலுத்தி மீண்டும் பிடிக்கப்பட்ட மக்னா யானை
வயநாடு சுல்தான்பத்தேரிக்குள் மக்னா யானை புகுந்து முதியவரை தூக்கி வீசியது. அந்த யானையை மீண்டும் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து மரக்கூண்டில் அடைத்தனர்.
கூடலூர்,
வயநாடு சுல்தான்பத்தேரிக்குள் மக்னா யானை புகுந்து முதியவரை தூக்கி வீசியது. அந்த யானையை மீண்டும் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து மரக்கூண்டில் அடைத்தனர்.
மக்னா யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் கடந்த நவம்பர் மாதம் பாப்பாத்தி என்ற பெண்ணை மக்னா யானை தாக்கி கொன்றது. இந்த யானையை வனத்துறையினர் பி.எம்.2. என்றும், பொதுமக்கள் அரிசி ராஜா எனவும் அழைத்து வருகின்றனர். இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த மாதம் 8-ந் தேதி மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி முதுமலை வனத்துறையினர் பிடித்தனர்.
பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காங்கிரஸ் மட்டம் அடர்ந்த வனப்பகுதியில் மக்னா யானை விடப்பட்டது. ஆனால், ஒரு வாரத்தில் யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து தெப்பக்காடு, கக்கநல்லா வனப்பகுதியில் முகாமிட்டு இருந்தது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
மயக்க ஊசி செலுத்தினர்
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை 3.30 மணிக்கு வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி நகருக்குள் மக்னா யானை புகுந்தது. அப்போது சாலையோரம் நடந்து சென்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த வழியாக சென்ற பஸ்களையும் காட்டு யானை துரத்தியது. அந்த சமயத்தில் முதியவர் ஒருவரை மக்னா யானை தூக்கி வீசியது. பின்னர் குப்பாடி வனப்பகுதிக்குள் யானை சென்றது.
இதையடுத்து மக்னா யானையை பிடிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கேரள வனத்துறை மந்திரி சசீந்திரன், தலைமை முதன்மை வன பாதுகாவலர் கங்கா சிங் ஆகியோர் மக்னா யானையை பிடிக்க உத்தரவிட்டனர். அதன் பேரில் முத்தங்கா சரணாலய கால்நடை டாக்டர் அருண் சக்கரியா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நேற்று மக்னா யானையை கண்காணித்தனர். தொலைவில் இருந்து கண்காணித்த குழுவினர், மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் வனத்துறை லாரியில் மக்னா யானையை ஏற்றி வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
டாக்டர் காயம்
அதன் பின்னர் முத்தங்கா சரணாலயத்திற்கு சென்று, அங்குள்ள மரக்கூண்டில் மக்னா யானையை அடைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது டாக்டர் அருண் சக்கரியாவை யானை திடீரென துதிக்கையால் அவரது காலை பிடித்து இழுத்தது. தொடர்ந்து அவர் யானையிடம் தப்பிப்பிதற்காக காலை இழுத்த போது, லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் சுல்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மரக்கூண்டில் மக்னா யானையை வனத்துறையினர் அடைத்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கூடலூர் அருகே தேவாலாவில் பிடிபட்டு வனப்பகுதியில் விடப்பட்ட ஒரு மாதத்துக்குள், கேரள வனத்துறையினரிடம் மக்னா யானை மீண்டும் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.