பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்தவர் கைது
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
கேரள வாலிபர்...
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான காட்சிகள் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை சேர்ந்தவர் கைது
இந்த நிலையில் இந்த நகை பறிப்பில் சென்னை குளத்தூர் தணிகாசலம் முதல் தெருவை சேர்ந்த முகமது பயாஸ் (வயது 38) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மார்த்தாண்டம் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் சென்னைக்கு விரைந்து செய்து முகமது பயாசை கைது செய்து குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், முகமது பயாசும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாறசாலையை சேர்ந்த வாலிபரும் கூட்டாளிகள் என்பதும், இருவரும் ஒரு வழக்கில் சிறைக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டு கூட்டாளிகளாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.