சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி வெளிமாநில பெண்களை பாலியல் தொழிலுக்கு விற்றவர் கைது


சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி வெளிமாநில பெண்களை பாலியல் தொழிலுக்கு விற்றவர் கைது
x

வெளிமாநில பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி சென்னைக்கு கடத்தி வந்து, அவர்களை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் என்ற ஜேக்கப் (வயது 38). இவர் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சினிமா ஆசைகாட்டி பெண்களை விமானத்தில் அழைத்து வருவார். இங்கு வாடகைக்கு வீடு எடுத்து அதில் தங்க வைப்பார்.

பின்னர் அவர்களை பாலியல் தொழிலுக்கு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என்று விலைபேசி விற்று விடுவாராம். இவர் மீது 5 பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொடுமையான கொரோனா காலத்தில் கூட இவரது தொழில் பாதிக்கவில்லை.

9 ஆண்டுகளாக தலைமறைவு

கடந்த 9 ஆண்டுகளாக போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். இவர் எங்கு தங்குகிறார், எப்படி பெண்களை கடத்தி வந்து, விற்பனை செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வந்தனர்.

சினிமா ஆசையால் இவரிடம் சிக்கிய அழகிய இளம்பெண்கள் சின்னாபின்னமான கண்ணீர் கதைகள் ஏராளம்.

இவரை பற்றி கேள்விப்பட்ட போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், இவரை கைது செய்ய விபசார தடுப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது.

கைது

இவர் கொரட்டூரில் உள்ள தனது குடும்பத்தினரை ரகசியமாக சந்தித்துவிட்டு செல்வதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

அப்போது தனிப்படை போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்து விட்டனர். அவரிடம் தீவிர விசாரணை நடப்பதாகவும், நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

100 பெண்களின் புகைப்படங்களுடன்...

கார்த்திகேயனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதை ஆய்வு செய்தனர். அப்போது அதில் அதிர்ச்சி தரும் 100-க்கும் மேற்பட்ட அழகிய பெண்களின் புகைப்படங்கள் இருந்தன.

அந்த பெண்கள், கார்த்திகேயனின் விபசார வலையில் சிக்கியவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. அது பற்றி விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story