சென்னை- பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் 17 பவுன் நகை திருடியவர் கைது
சென்னை- பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணிடம் 17 பவுன் நகையை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம்:
ரெயிலில் கைவரிசை
சென்னை- பழனி- பாலக்காடு விரைவு ெரயில் சேலம் ெரயில் நிலையம் வந்தது. அப்போது குளிர்சாதன வசதி பெட்டியில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் மர்ம நபர் ஒருவர் கீழே இறங்கி சென்றார். அவரை சேலம் ெரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை திறந்து சோதனையிட்டனர். அதில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை இருந்தது. அதில் 17 பவுன் தங்க சங்கிலி, செல்போன் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர், திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த முத்துராமன் என்ற ரித்தின் (வயது 46) என்பது தெரியவந்தது. இவர் குளிர்சாதன வசதி பெட்டியில் உள்ள பெண் பயணியிடம் கைப்பையை திருடியது தெரியவந்தது.
கைது
உடனே போலீசார் அந்த செல்போனில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அது, சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மனைவி சூர்யா (67) என்பது தெரிய வந்தது.
உடனே சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரித்தினை கைது செய்தனர். அவரிடம் இருந்த தங்க சங்கிலி, செல்போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் சேலம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.