நீதிபதியின் உதவியாளர் என்று சொல்லி கல்லூரியில் 'சீட்' கேட்டு மிரட்டியவர் கைது
சென்னையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சீட்டு கேட்டு மிரட்டிய ஐகோர்ட்டு நீதிபதியின் போலி தனிச்செயலாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு, ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் பெயரைச் சொல்லி அவரது தனிச்செயலாளர் பேசுகிறேன் என்று நபர் ஒருவர் பேசினார். குறிப்பிட்ட நீதிபதியின் மகனுக்கு, என்ஜினீயரிங் கல்லூரியில் சீட்டு தரவேண்டும் என்று அந்த நபர் மிரட்டல் பாணியில் பேசினார். அவரது பேச்சு, கல்லூரி நிர்வாகத்தினருக்கு சந்தேகத்தை கிளப்பியது.
குறிப்பிட்ட நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியிடம் இதுகுறித்து கல்லூரி தரப்பில் பேசப்பட்டது. பாதுகாப்பு அதிகாரி, இதுபோல தனிச்செயலாளர் யாரும் இல்லை என்று கூறினார். குறிப்பிட்ட நபர் பேசிய செல்போன் நம்பரை வாங்கி, அவரிடம் நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி பேசினார்.
அவரிடமும் அந்த நபர், தன்னை நீதிபதியின் தனிச்செயலாளர் என்றே குறிப்பிட்டார். அவர் நீதிபதியின் பெயரில் மோசடி செய்யும் நோக்கத்தில் செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் போலியான நபர் என்பதும் கண்டறியப்பட்டது. அந்த நபர் தனது மகனை குறிப்பிட்ட கல்லூரியில் சேர்த்துவிட, இதுபோல நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளார்.
கைதானார்
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஐகோர்ட்டு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலியான நபரின் பெயர் வெங்கடேச பெருமாள் (வயது 52) என்றும், சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.