திருச்சியில் ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.18 லட்சம் மோசடி செய்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
திருச்சியில் ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.18 லட்சம் மோசடி செய்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.18 லட்சம் மோசடி செய்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பணம் முதலீடு
திருச்சி கருமண்டபம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது கலாம்ஜி (வயது 45). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ராயல் கிங் ஈமு பார்மடீஸ் என்ற ஈமு கோழி பண்ணை நடத்தி வந்தார்.
மேலும் இந்த பண்ணையில் முதலீடு செய்தால் முதிர்வு தொகையுடன் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதில் மாதம் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 1 வருடத்தில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், மாதா மாதம் செலுத்திய பணத்தையும் திருப்பி தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் பலர் இந்த ராயல் கிங் ஈமு பார்மடீஸ் நிறுவனத்தில் சேர்ந்து பணம் முதலீடு செய்தனர்.
ரூ.18 லட்சம் மோசடி
தொடக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுத்து வந்தனர். பின்னர் பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளனர். இதில் ரூ.18 லட்சத்திற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பணம் முதலீடு செய்தவர்கள் அந்த நிறுவனத்திற்கு சென்று முறையிட்டனர். அங்கு அவர்களுக்கு சரியான நிவாரணம் கிடைக்காததால் இந்த சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த பெரியதம்பி என்பவர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் முகமது கலாம்ஜிக்கு கடந்த 2018-ம் ஆண்டு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து முகமது கலாம்ஜி தலைமறைவானார். அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று காலை 5 வருடமாக தலைமறைவாக இருந்த முகமது கலாம்ஜியை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இந்த நிறுவனத்தை எத்்தனை பேர் நடத்தி வந்தனர், பணம் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் எத்தனை பேர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.