முதல்-அமைச்சர் செல்லும் வழியில் பொம்மை துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரால் பரபரப்பு
முதல்-அமைச்சர் செல்லும் வழியில் பொம்மை துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் கோட்டைகரட்டில் சூரிய லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை இதேபோல் பொதுமக்கள் நடைபயிற்சிக்காக சென்றபோது அந்த பகுதியில் மர்பநபர் ஒருவர் துப்பாக்கியுடன் உட்கார்ந்து இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த நபரை செல்போனில் போட்டோ எடுத்து அதனை போலீசாருக்கு அனுப்பி தகவல் தெரிவித்தனர். நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மல்லூர் வழியாக சென்னை செல்ல இருந்த நிலையில் அந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக தகவல் பரவியது. இதையடுத்து மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் துப்பாக்கியுடன் இருந்த மர்ம நபர் அங்கு இல்லை.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் மல்லூர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கணபதி நகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாத்பிரபு (வயது 31) என்பது தெரியவந்தது. அவர் சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள காந்தி ஸ்டேடியம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விஸ்வநாத்பிரபுவை மடக்கி பிடித்தனர். அப்போது அவரது கையில் பொம்மை துப்பாக்கி இருந்தது. மேலும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
முதல்-அமைச்சர் செல்லும் வழியில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததாக பரவிய தகவலால் பரபரப்பு நிலவியது.