மாஸ்டர் பிளான் திட்டத்தை வரையறை செய்ய வேண்டும்


மாஸ்டர் பிளான் திட்டத்தை வரையறை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் நகராட்சி கூட்டத்தில் மாஸ்டர் பிளான் திட்டத்தை வரையறை செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் நகராட்சி கூட்டத்தில் மாஸ்டர் பிளான் திட்டத்தை வரையறை செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

அனுமதியின்றி கட்டிடங்கள்

குன்னூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் மன்ற அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வாசிம் ராஜா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

மன்சூர்(தி.மு.க.):- குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி. டெண்ட் ஹில் நடைபாதையை நகராட்சி பொது நிதியில் இருந்து சீரமைத்து தர வேண்டும்.

ராமசாமி(தி.மு.க.):- கடந்த ஆண்டுகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தற்போது சீல் வைத்த கட்டிடங்களை திறக்க அனுமதி யார் அளித்தது என கேள்வி எழுப்பினார். நகராட்சிக்கு சொந்தமாக எத்தனை வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. பராமரிப்பு செலவிற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நிதி ஒதுக்கவில்லை

ஜாகிர்:- குன்னூரில் பல்வேறு இடங்களில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், தரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், பணிகள் நடைபெறும் போது அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சரவணகுமார்(அ.தி.மு.க.):-

எனது வார்டில் முறையாக கழிப்பிடம் இல்லை என்றும், கோவில் திருவிழா காலங்களில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கழிப்பிட வசதி செய்துதர வேண்டும். நீலகிரியில் அமலில் உள்ள மாஸ்டர் பிளான் திட்டத்தை வரையறை செய்ய வேண்டும்.

சாந்தா சந்திரன் (தி.மு.க.):-

கடந்த 7 மாதமாக எந்த நிதியும் தனது வார்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கண்ணீருடன் கூறினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி:- தற்போது பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.


Next Story