ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டம்
திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டம் நடந்தது.
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி தலைவர்கள், செயலர்களுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) விஜயன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, குடியரசு தின விழாவில் சாதிய பாகுபாடு இன்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடத்த வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கூறினார். கூட்டத்தில் திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.