டயர் வெடித்ததில் சாலையில் கவிழ்ந்த மினிலாரி
டயர் வெடித்ததில் மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல்லில் இருந்து திருப்பத்தூருக்கு வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று நேற்று புறப்பட்டது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக் (வயது 31). என்பவர் ஓட்டினார். காலை 11 மணி அளவில் கோபால்பட்டி கூட்டுறவு வங்கி முன்பு வந்த போது திடீரென மினிலாரியின் பின்பக்க டயர்களில் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பின்பக்க டயர்கள் மினிலாரியில் இருந்து கழன்று சாலையில் ஓடியது. இதற்கிடையே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மினிலாரிக்குள் இருந்து பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர். பின்னர் வெங்காய மூட்டைகளை வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்க உதவினர். இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.