குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்று மகளிர் ஊர்நல அலுவலர் சங்கத்தின் மண்டல கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்று மகளிர் ஊர்நல அலுவலர் சங்கத்தின் மண்டல கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மண்டல கூட்டம்
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் சங்கத்தின் மண்டல கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் இளையபெருமாள் தலைமை தாங்கினார். வரதன் வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், மோகன், ரங்கநாதன், கிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநில தலைவர் மதுரை சங்கர்பாபு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 6-ன்படி சத்துணவு பணிக்காலம் சதவீதத்தை ஆசிரியர், மகளிர் ஊர்நல அலுவலர், விரிவாக்க அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோரது நிரந்தர பணிக்காலத்துடன் கணக்கீட்டு பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையார் ரத்னா பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அடுத்தாண்டு நிதி நிலை அறிக்கையில் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சமுக நலத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி மறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.