தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்


தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விலை குறைவாக இருப்பதால் தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

விலை குறைவாக இருப்பதால் தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

இதில் வேளாண் தொழில்நுட்பங்கள் காணொலி மூலமாக எடுத்துரைக்கப்பட்டன. தோட்டக்கலைத் துறையின் மூலம் கூட்டத்தில் கலந்துகொண்ட 5 விவசாயிகளுக்கு ஆடிப்பட்டத்தில் விதைக்க 5 விதை ரகங்கள் வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறையின் கீழ் கோதையாறு வடிகால் மூலம் விவசாய பாசனத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் விவரங்கள் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகள் குறித்து விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் ஜோதிபாசு விரிவாக எடுத்துரைத்தார்.

தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை

பின்னர் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும்போது கூறியதாவது:-

பறக்கை நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தை மேம்படுத்தி நெல் நனையாமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும். தேங்காய் விலை குறைந்து வருவதால் விவசாயிகளின் நலன் கருதி தேய்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பிறயரா குளத்தில் அனுமதித்ததைவிட கூடுதலாக வண்டல்மண் எடுத்து ஷட்டரை சேதப்படுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வில்லுக்குறி அ மற்றும் ஆ கிராமங்களில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மேற்படி குளங்களில் உள்ள சேதங்களை சரிசெய்ய வேண்டும். அகஸ்தீஸ்வரம் தாலுகா தெங்கம்புதூர் கிராமத்திற்கு உட்பட்ட பால்குளத்தின் இரண்டு மடைகளின் மறுகால்களை செப்பனிட வேண்டும். என்.பி. கால்வாய் கழுவடிமடை முதல் நடுமடை, புதுமடை பகுதியில் என்.பி. கால்வாயின் அகலத்தை குறைத்து நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமித்து நீர்பிடிப்பு பகுதியை குறைவாக்கி தடுப்புச்சுவர் அமைக்க பொதுப்பணித்துறை அனுமதி பெறப்பட்டுள்ளதா?

விவசாயம் பாதிப்பு

இரணியல் அருகே நெய்யூர் இரட்டை ரெயில்வே பாதை மேம்பாலம் தாழ்வாக கட்டப்பட்டதால் தண்ணீர் தேங்குகிறது. இதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருங்கல் பட்டணங்கால் பிரிவு கால்வாயில் இருந்து வெட்டி கடத்தப்பட்ட மரங்களுக்கு அபராதம் வசூலிக்க கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு என்ன ஆனது? பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. தேரூர் குளத்தில் வனத்துறை செயல்பாடுகள் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்துக்கு வனத்துறை அதிகாரி யாரும் வரவில்லை. கீழ்மட்ட அளவிலான வனத்துறை ஊழியர்களை இந்த கூட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆலோசனை

கலெக்டர் ஸ்ரீதர்:- பறக்கை நெல் கொள்முதல் செய்யும் இடத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்.பி.கால்வாய் தொடர்பாக மாவட்ட உயர்மட்ட குழுவில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரிகள்:- தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்பது மத்திய மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவை சார்ந்ததாகும் எனவும் தென்னை விவசாயிகள் மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின்கீழ் வடசேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1-4-2023 முதல் 30-9-2023 வரை அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படுவதால் தேங்காய் விளைபொருட்களை அரவைக் கொப்பரையாக மாற்றி கிலோவிற்கு ரூ.108.60 என்ற விலையில் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம். விவசாயிகள் வேளாண் கட்டமைப்பு நிதியில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வண்டல் மண் எடுத்து ஷட்டரை சேதப்படுத்தியவர்கள் மீது குற்றவியல் மற்றும் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வில்லுக்குறி பகுதியில் உள்ள குளங்களை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தெங்கம்புதூர் கிராமம் பால்குளத்தின் இரண்டு மடைகள் சரிசெய்ய ரூ.5 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இத்துறைக்கு ஒதுக்கப்பட்ட வருடாந்திர பராமரிப்பு நிதி ஆதாரம் போதுமானதாக இல்லாததால் வரும் நிதி ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் செயல்படுத்தப்படும்.

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன், வேளாண்மை துணை இயக்குனர் வாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலாஜாண், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன், அரசுத்துறை அலுவலர்கள், குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் புலவர் செல்லப்பா, தாணுப்பிள்ளை, முருகேசபிள்ளை, விஜி, ஹென்றி, அருள், பெரியநாடார், தேவதாஸ், தங்கப்பன், பால்ராஜ், ஸ்ரீகிருஷ்ணபெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story