ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் லிப்டில் மாட்டிக்கொண்ட அமைச்சர்


ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் லிப்டில் மாட்டிக்கொண்ட அமைச்சர்
x

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆஸ்பத்திரிக்கு வந்தார். நிகழ்ச்சி நிறைவு பெற்றதை அடுத்து 3-வது தளத்திலிருந்து தரை தளத்திற்கு லிப்டின் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டது. இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் 'ஐட்ரீம்' மூர்த்தி, சுகாதார துறை செயலாளர் செந்தில் குமார் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர் ஆகியோர் லிப்டில் சிக்கி கொண்டனர்.

10 நிமிட போராட்டம்

இந்தநிலையில் ஆபத்து கால கதவின் வழியே, சிக்கிகொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 10 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர் மற்றும் உடனிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

சென்னையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் பழுதாவது தொடர்கதையாகி வருகிறது.

ஏற்கனவே ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பழுதான லிப்ட்கள் இன்று வரை சரி செய்யப்படவில்லை. சுமார் 5 மாதங்களாக லிப்ட் சரி செய்யும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் இயங்கி கொண்டிருக்கும் ஒன்றிரண்டு லிப்டுகளை மட்டுமே நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நம்பியுள்ளனர். இந்தநிலையில் அமைச்சர் சென்ற லிப்டும் நேற்று பழுதாகியிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வரும் நிலையில் மக்களின் பாதுகாப்புக்கு அரசு ஆஸ்பத்திரியால் எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும். மருத்துவ நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள மற்ற அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள லிப்ட்களையும் சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


Next Story