மின்கசிவினால் வைக்கோல் ஏற்றி சென்ற மினிவேன் எரிந்து நாசம்
ஆரணி அருகே மின்கசிவினால் வைக்கோல் ஏற்றி சென்ற மினிவேன் எரிந்து நாசமானது.
ஆரணி
ஆரணி அருகே ராந்தம் கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், விவசாயி. இவரது நிலத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டு சுமார் 60 சாமை கொண்ட வைக்கோலை கண்ணமங்கலம் அருகே நஞ்சுகொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்கு விற்பனை செய்தார்.
இதையடுத்து அவர் போளூரை அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த மினிவேன் டிரைவர் விக்ரம் மூலமாக வைக்கோலை ஏற்றி செல்வதற்காக மினிவேனை அனுப்பினார்.
மினி வேனில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வெளியே வந்த மினிவேன் மேலே தாழ்வான நிலையில் சென்ற மின் வயரில் உரசியது. இதில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனால் டிரைவர் விக்ரம் மினிவேனில் இருந்து இறங்கி தப்பினார்.
இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வாகனம் இல்லாததால் கலவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கலவையிலிருந்து தீயணைப்பு துறை அலுவலர்கள் சென்று மினிவேனில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்த்தனர். இதில் மினி வேன் முழுவதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் ஜெயசீலன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.