இணைப்பு சாலை இல்லாததால் அந்தரத்தில் தொங்கும் 'அதிசய' பாலம்
சீர்காழி அருகே உப்பனாற்றில் ரூ.30 கோடியில் கட்டப்பட்ட பாலம் யாருக்கும் பயன் இல்லாமல் வீணாக கிடக்கிறது. இணைப்பு சாலை இல்லாததால் இந்த பாலம் அந்தரத்தில் தொங்கும் அதிசய பாலமாகி விட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். சாலை வசதி இன்றி மீனவர்கள் 40 கி.மீ. தூரம் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உப்பனாற்றில் ரூ.30 கோடியில் கட்டப்பட்ட பாலம் யாருக்கும் பயன் இல்லாமல் வீணாக கிடக்கிறது. இணைப்பு சாலை இல்லாததால் இந்த பாலம் அந்தரத்தில் தொங்கும் அதிசய பாலமாகி விட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். சாலை வசதி இன்றி மீனவர்கள் 40 கி.மீ. தூரம் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
விரைவாக செல்ல சாலை வசதி இல்லை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு, புதுப்பட்டினம், மடவாமேடு, கொட்டாயமேடு, ஓலை கொட்டாயமேடு, தாண்டவன் குளம், கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை விற்பனைக்காக நாகைக்கு கொண்டு செல்வது வழக்கம்.
பழையாறு, திருமுல்லைவாசல் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்களை விரைவாக நாகைக்கு கொண்டு செல்ல கடற்கரை ஓரம் சாலை வசதி இல்லை.
அந்தரத்தில் தொங்கும் அதிசய பாலம்
எனவே பழையாறு, திருமுல்லைவாசலில் இருந்து மீனவர்கள் மீன்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சீர்காழி வரை வந்து மீண்டும் நாகை நோக்கி பயணிக்கிறார்கள். இந்த சுற்றுப்பாதை வழியாக நாகை செல்வதால் 40 கி.மீ. தூரம் வரை மீனவர்கள் இன்றளவும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த பயண தூரத்தை குறைக்க திருமுல்லைவாசல்- கீழமூவர்க்கரை இடையே உள்ள உப்பனாற்றில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 30 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டு விட்டது. ஆனால் யானை வாங்கினால் போதுமா? அங்குசம் வேண்டாமா? என்ற கதையாக பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்காததால் உப்பானாற்று பாலம் அந்தரத்தில் தொங்குகிறது. எனவே இந்த பாலத்தை இந்த பகுதி மக்கள் அந்தரத்தில் தொங்கும் 'அதிசய பாலம்' என்றே அழைக்கிறார்கள்.
மீனவர்கள் வேதனை
பல ஆண்டுகால கோரிக்கைக்குப்பின் இந்த பாலம் கட்டப்பட்டது. ஆனாலும் யாருக்கும் பயனின்றி வீணாக கிடக்கிறது. கையில் வெண்ணெய் இருந்தும் நெய்க்கு அலைகிறார்கள் என வேடிக்கையாக கூறுவார்கள். அதேபோல பாலம் இருந்தும் பயணிக்க முடியாமல் இந்த பகுதி மக்கள் தினசரி அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல் விலை மற்றும் நேர விரயம் ஒரு புறம், வீண் அலைச்சல் மற்றும் பாலம் இருந்தும் நேரடியாக நாகைக்கு செல்ல முடியவில்லையே என்ற வேதனை மறுபுறம் என மீனவர்கள் பரிதவித்து வருகிறார்கள்.
12 ஆண்டுகளாக...
12 ஆண்டுகளாக இந்த பாலத்தில் இணைப்பு சாாலை அமைக்கப்படாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. இந்த பாலத்தின் இருபுறத்திலும் இணைப்பு சாலைைய விரைந்து அமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
64 மீனவ கிராமங்கள் பாதிப்பு
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் கூறுகையில், திருமுல்லைவாசல் உப்பனாற்றில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தில் இணைப்பு சாலை இல்லாததால் மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் 64 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இணைப்புச் சாலை இல்லாததால் மீனவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைக்கழிக்கப்படுகின்றனர். மீனவர்கள் பிடிக்கும் மீன்களை உடனுக்குடன் நாகை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே அரசு மீனவர்களின் கோரிக்கையை ஏற்று திருமுல்லைவாசல் உப்பனாற்று பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்றார்.