ஒரு தலை 2 உடல்கள், 4 காது, 8 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி
ஒரு தலை 2 உடல்கள், 4 காது, 8 கால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டி பிறந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி சுமதி. ஆடு வளர்க்கும் தொழில் செய்யும் இவர்கள் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் அவர்களது ஆடுகளை பட்டத்திக்காடு சித்திவிநாயகர் கோவில் அருகே மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது கருவுற்றிருந்த ஒரு ஆடு, குட்டியை ஈன முடியாமல் பலமாக கத்தியது. இதையடுத்து ராஜேந்திரன், சுமதி இருவரும் அந்த ஆட்டின் அருகே ஓடி வந்தனர். அப்போது அந்த ஆடு ஒரு தலை, 2 உடல்கள், 4 காதுகள் 8 கால்களுடன் குட்டியினை ஈன்றது. இதை கண்டு தம்பதிகள் இருவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த அதிசய ஆட்டுக்குட்டி உயிர் இழந்தது. இதனால் ஆட்டுக்குட்டியை பார்க்க சென்றவர்கள் சோகம் அடைந்தனர்.