பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணி
பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணி நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி இடைநின்ற மற்றும் இடை நிற்கும் வாய்ப்பு உள்ள மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரச்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தா.பழூர் வட்டார வள மையம் சார்பில் அனைவருக்கும் கல்வித்திட்ட வட்டார மேற்பார்வையாளர்(பொறுப்பு) சுதா தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் அந்தோணி தாஸ், சிவா ஆகியோர் அடங்கிய குழுவினர், தா.பழூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து இடைநின்ற மாணவர்கள் மற்றும் இடை நிற்கும் வாய்ப்புள்ள மாணவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். 6 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்கள் குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களில் பள்ளி செல்லாமல் உள்ள மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூரில் பள்ளி இடைநிற்கும் வாய்ப்புள்ள 2 மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தினர். மாணவர்களும் பள்ளி செல்வதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தொடர்புடைய பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.