பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் நவீன எந்திரம்


பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் நவீன எந்திரம்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துப்புரவு பணியாளர்கள் கையால் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதை தவிர்க்க, நவீன எந்திரத்தை கண்டுபிடித்த மெக்கானிக்கை கலெக்டர் பாராட்டினார்.

நாகப்பட்டினம்


துப்புரவு பணியாளர்கள் கையால் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதை தவிர்க்க, நவீன எந்திரத்தை கண்டுபிடித்த மெக்கானிக்கை கலெக்டர் பாராட்டினார்.

நவீன எந்திரம்

தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ளும்போது அந்த இடத்தில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படுவது வழக்கம். அதேபோல சாக்கடை, கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசுக்கள் தேங்குவதை தவிர்க்கவும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படும்.மேலும் அரசு நிகழ்ச்சிகள், தலைவர்கள் வருகையின் போது சுற்று வட்டார பகுதிகள் தூய்மையாக இருப்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது. இந்த பணிகளை தூய்மை பணியாளர்கள் தான் கையாண்டு வருகின்றனர். பிளீச்சிங் பவுடரை கையில் அள்ளி தெளிக்கும்போது, அலர்ஜி உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்சினைகள் தூய்மை பணியாளர்களுக்கு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் விதமாக வேளாங்கண்ணியை சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன் என்பவர் பிளீச்சிங் பவுடரை தெளிக்கும் நவீன எந்திரம் ஒன்றை தயாரித்து உள்ளார். இதனை நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு, நாகேந்திரனின் முயற்சியை பாராட்டினார்.

அரசு அங்கீகரிக்க வேண்டும்

இதுகுறித்து நாகேந்திரன் கூறும்போது:-

சுகாதார பணிகளுக்காக தூய்மை பணியாளர்கள் பிளீச்சிங் பவுடரை கையால் தான் கையாண்டு வருகின்றனர். இப்படி பயன்படுத்தும்போது பல பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் எந்திரத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.

அதன்படி ரூ.24 ஆயிரம் மதிப்பில் எந்தவித எரிபொருளும், மின்சாரமும் இல்லாமல் கையாலேயே தள்ளி சென்று பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் அமைப்புடன் எந்திரத்தை தயார் செய்து உள்ளேன். இதனால் தூய்மை பணியாளர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் இருக்காது. வேலை பளு குறையும். இந்த தொழில்நுட்பத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றார்.


Next Story