காயல்பட்டினத்தில் நவீன பனைவெல்ல உற்பத்தி மையம்:கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்


தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் நவீன பனைவெல்ல உற்பத்தி மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன பனைவெல்ல உற்பத்தி மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

நவீன பனைவெல்ல உற்பத்தி மையம்

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்தின் மூலம் காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன பனைவெல்ல உற்பத்தி மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த நவீன மையத்தினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பெண்களுக்கு நலத்திட்ட உதவி

நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் சீ.சுரேஷ் திட்ட விளக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பதநீர் உற்பத்தியில் ஈடுபடும் பெண்களுக்கு பதநீர் காய்ச்சும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவிகலெக்டர் குரு சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, காயல்பட்டினம் நகர சபை தலைவர் கே.ஏ. எஸ். முத்து முகமது, தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் எஸ்.பி.ஆர். ரங்கநாதன் என்ற சுகு, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குளி ரமேஷ், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளிக்கு அடிக்கல்

ஏரல் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியின் கட்டிடம் மிகவும் இடிந்துவிழும் நிலையில் மிக மோசமாக இருந்ததால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. மாணவிகள் ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனி வகுப்பறை கட்டிடம் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று படித்து வருகின்றனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட கல்விநிதி அறக்கட்டளை மூலமாக ரூ.2.92 கோடி நிதியும், ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி மூலம் ரூ.1.17 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து, ஆக மொத்தமாக ரூ.4.09 கோடியில் ஏரல் மகளிர் மேல்நிலைப் பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இவ்விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், ஸ்ரீவவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி வரவேற்றார். ஏரல் பேரூராட்சி தலைவர் சாமிளாதேவி மணிவண்ணன் நன்றி கூறினார். இந்த விழாவில் மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர் கோட்டாளம், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் துணைத் தலைவர் தர்மராஜ், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் அருணாசலம், தொழில் அதிபர்கள் செல்வராஜ், விவேகானந்தன், பாலன், சண்முகநாதன், சமூக ஆர்வலர் ஜெயபாலன், தாசில்தார் கைலாசகுமாரசாமி, வருவாய் ஆய்வாளர் முத்துசரவணன், ஆணையாளர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜிலாமேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story