நாய்களை கடித்து குதறும் குரங்கு; கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
வீரவநல்லூர் பகுதியில் நாய்களை கடித்து குதறும் குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் வீட்டில் வளர்க்கும் நாய் உள்பட சுமார் 7 நாய்களை அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்கு ஒன்று கடித்து குதறியது. இதுகுறித்து அப்பகுதியினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நெல்லை வனத்துறை மருத்துவர் தாமோதரன் தலைமையிலான வனத்துறையினர், வீரவநல்லூர் பகுதியில் சுற்றித்திரியும் குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்காக பெரிய கூண்டு கொண்டுவரப்பட்டு, கூண்டினுள் குரங்கை பிடிக்க வாழைப்பழம், சுண்டல் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியும் குரங்கை பிடிக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து குரங்கின் மீது மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்பும் குரங்கு பிடிபடாமல் மயக்க நிலையில் மாயமாகியுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் இரவு நேரம் வரை தேடியும் குரங்கு கிடைக்காததால் கூண்டினை வைத்துவிட்டு சென்று உள்ளனர்.