ஒரு மாத தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது: அட்டகாசம் செய்த புலி சிக்கியது


ஒரு மாத தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது: அட்டகாசம் செய்த புலி சிக்கியது
x

ஒரு மாதமாக அட்டகாசத்தில் ஈடுபட்ட புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மல்லமுத்தன்கரை, மூக்கறைக்கல் ஆகிய பழங்குடியின குடியிருப்புகளில் புலி புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. 6 ஆடுகள், 2 மாடுகளை புலி கடித்துக் கொன்று வேட்டையாடிய சம்பவம் அங்குள்ள மக்கள், ரப்பர் பால் வடிக்க சென்ற தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் ஒரு மாதமாக நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஆனால் ஒவ்வொரு இடமாக மாறி சென்று புலி அட்டகாசத்தில் ஈடுபட்டதால், அதனை பிடிப்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்தநிலையில், பத்துகாணி மேலே மண்ணடி, கீழ் மணணடி கல்லறை வயல் பகுதியில் புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர்.

பிடிபட்டது

இதனால் வனத்துறையினருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் டாக்டர்கள் குழுவினருடன் நேற்று காலை முதல் பத்துகாணி, ஆறுகாணி கல்லறை வயல் என்ற இடத்தில் புலியை சல்லடை போட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 3.15 மணிக்கு வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்டறிந்தனர். உடனே கால்நடை டாக்டர்கள் துப்பாக்கி மூலம் புலி மீது மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் அந்த புலி மயங்கியது.

தொடர்ந்து புலியை கூண்டில் அடைத்து டெம்போவில் ஏற்றி பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் சோதனைச் சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அது 13 வயதுடைய ஆண் புலி என வனத்துறையினர் தெரிவித்தனர். ஒரு மாதமாக சவாலாக இருந்த புலியை பிடித்ததால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். பிடிக்கப்பட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது என மாவட்ட வன அதிகாரி இளையராஜா தெரிவித்துள்ளார்.


Next Story