கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும்


கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:06 AM IST (Updated: 20 Jun 2023 8:14 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக்கடன், இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 441 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 56 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு கரூர் மாவட்ட கலெக்டர் வழியாக கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

35, 36, 37-வது கட்டுமான வாரிய கூட்டத்தில் அரசு தரப்பு பிரதிநிதிகள், தொழில் நடத்துனர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் விவாதித்து தொழிலாளர்களுக்கு பயனுள்ள கோரிக்கைகளை முத்தரப்பு கமிட்டியும் ஏற்றுக்கொண்ட வாரிய கூட்ட முடிவுகளை வாரிய தலைவர், செயலாளர் மூலம் தங்களின் மேலான பார்வைக்கும், அரசின் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை காலதாமதமின்றி அரசாணையாக வெளியிட்டு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

10-ந்தேதிக்குள்...

கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,000 என்பதை ரூ.2,000 என உயர்த்தி வாரியம் முடிவு செய்ததை விரைந்து அமுல்படுத்துவதுடன், 3,000 ரூபாயாக அதிகரித்து வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். 60 வயது நிறைவடைந்து விண்ணப்பித்த நாள் முதல் ஓய்வூதியம் வழங்கிட ஆவண செய்திட வேண்டும்.

தாமதமாகும் காலங்களுக்கு நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் கணக்கீடு செய்து வழங்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்குவதோடு அதனை பிரதி மாதம் 10-ந்தேதிக்குள் கிடைக்க ஆவண செய்திட வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்தால் அவரது குடும்பத்திற்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்.

இறுதி புதுப்பித்தல் தவறிய 60 வயது பூர்த்தி அடைந்த தொழிலாளிக்கு புதுப்பித்தலை காரணம் காட்டாமல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விரைந்து அமலாக்கி அரசாணை வெளியிட வேண்டும் எனவும், பணப்பயன் நிவாரணங்களை நலவாரிய கூட்ட முடிவு தேதியிலிருந்து வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 740 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 21 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story