கிணற்றில் தவறி விழுந்த கடமான்


கிணற்றில் தவறி விழுந்த கடமான்
x

ஆத்தூரில், கிணற்றில் தவறி விழுந்த கடமான் மீட்கப்பட்டது.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் நேற்று கடமான் ஒன்று சுற்றித்திரிந்தது. அப்போது அங்குள்ள தோட்டத்து கிணற்றில் அந்த மான் தவறி விழுந்தது. 80 அடி ஆழ கிணற்றில் பாதியளவு தண்ணீர் இருந்தது. இதனால் அந்த மான் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், கூண்டு வலையை பயன்படுத்தி கிணற்றுக்குள் தத்தளித்த கடமானை உயிருடன் மீட்டனர். கிணற்றில் இருந்து மேலே தூக்கியதும், வலையில் இருந்து துள்ளி குதித்த அந்த மான், அணை பகுதிக்குள் மறைந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி அந்த கடமான் வந்தபோது, கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்றனர்.


Next Story