சாலையை கடக்க முயன்றபோது காயமடைந்த கடமான்


சாலையை கடக்க முயன்றபோது காயமடைந்த கடமான்
x
தினத்தந்தி 27 Sept 2023 2:45 AM IST (Updated: 27 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் சாலையை கடக்க முயன்றபோது காயமடைந்த கடமானை வனத்துறையினர் மீட்டனர்.

தேனி

கம்பம் வனப்பகுதியில் சிறுத்தை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், அரியவகை பறவைகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று காலை கம்பம்மெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் கடமான் குட்டி ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் கடமான் குட்டி தடுமாறி விழுந்து காயமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த கடமான் குட்டியை மீட்டு கம்பம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் செல்வம், கடமான் குட்டிக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த மான் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனச்சரகர் ஸ்டாலின் கூறுகையில், "சாலையில் விழுந்து காயமடைந்த கடமான் குட்டி, பிறந்து 6 மாதங்களே ஆகிறது. கடமான் குட்டியை குறிப்பிட்ட நேரத்துக்குள் மீட்டு அதற்கு உரிய சிசிச்சை அளித்ததால் உயிர் காப்பாற்றப்பட்டது. கடமான் குட்டி மயக்க நிலை தெளிந்து இயல்பு நிலைக்கு வந்தவுடன் மீண்டும் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்படும்" என்றார்.


Next Story