3 மாத குழந்தையை காப்பாற்றி உயிரை விட்ட தாய்


3 மாத குழந்தையை காப்பாற்றி உயிரை விட்ட தாய்
x

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மாத குழந்தையை காப்பாற்றிய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மாத குழந்தையை காப்பாற்றிய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாகனம் மோதியது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (வயது 48), இவரது மகள் சந்திரலேகா (27).

இந்த நிலையில் சந்திரலேகாவின் 3 மாத ஆண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆஞ்சிநேயன் மோட்டார் சைக்கிளில் சந்திரலேகாவை உட்கார வைத்து கொண்டு நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து வெலக்கல்நத்தம் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள வேலூர் கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது சுண்ணாம்புகுட்டை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஆஞ்சிநேயன், சந்திரலேகா படுகாயம் அடைந்தனர்.

குழந்தையை காப்பாற்றிய தாய்

சந்திரலேகா தனது கை குழந்தை கீழே விழாமல் எந்தவித காயமின்றி காப்பாற்றினார். இதில் படுகாயம் ஆஞ்சிநேயன், சந்திரகலாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்திரலேகா தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சந்திரலேகாவின் தாயார் ஜெயந்தி நாட்டறம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

தனது கைக்குழந்தை சிறுகாயமின்றி காப்பாற்றி தாய் உயிர் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.


Next Story