ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குடிசை வீட்டின் மீது பாய்ந்த மோட்டார் சைக்கிள்
வாணியம்பாடி அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் சென்றபோது ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. குடிசை வீட்டின் மீது விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
வாணியம்பாடி அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் சென்றபோது ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. குடிசை வீட்டின் மீது விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
குடிசை மீது விழுந்தனர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீர் (வயது 17), கல்லூரி மாணவர். அதே பகுதியை சேர்ந்த டீக்கடை தொழிலாளியான ஆப்தாப் (21), தோல் தொழிலாளியான முதசீர் (19) மற்றும் நியூ டெல்லி பகுதியை சேர்ந்த ஆப்தாப் (21) ஆகியோர் நண்பர்களாவர். இவர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏலகிரி மலைக்கு சென்றுள்ளனர். மழை காரணமாக சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அவர்களது மோட்டார்கை்கிள் வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் 4 பேரும் மோட்டார்சைக்கிளுடன் 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த குடிசை வீட்டின் மீது விழுந்தனர். இதில் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணை
அந்த பகுதியில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட. பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த ஆப்தாப் மற்றும் முதசீர் ஆகிய இருவரையும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.