பஸ்சில் சிக்கிய மோட்டார் சைக்கிள்; தாய்-என்ஜினீயர் உடல் நசுங்கி பலி
எதிர் எதிரே வந்தபோது மோதிக்கொண்டதில் தனியார் பஸ்சின் அடியில் புகுந்து மோட்டார் சைக்கிள் சிக்கியது. இதில் என்ஜினீயரும், அவருடைய தாயாரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
அருப்புக்கோட்டை,
எதிர் எதிரே வந்தபோது மோதிக்கொண்டதில் தனியார் பஸ்சின் அடியில் புகுந்து மோட்டார் சைக்கிள் சிக்கியது. இதில் என்ஜினீயரும், அவருடைய தாயாரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
பஸ்-மோட்டார் சைக்கிள்
விருதுநகரில் இருந்து தனியார் பஸ் ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தது. புளியம்பட்டி பகுதியில் பஸ் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், அந்த பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் அடிப்பகுதியில் புகுந்தது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து வந்த 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விைரந்து வந்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
தாய்-என்ஜினீயர்
விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள அழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் செல்வி (வயது 46), அவருடைய மகன் என்ஜினீயர் செல்வகுமார் (27) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டைக்கு வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது இந்த விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு விபத்தில் ஒருவர் பலி
அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி மோட்டார்சைக்கிளில் நாககண்ணன் என்பவர் சென்று கொண்டு இருந்தார். அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், ஒரு காரும் மோதிக்கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே நாககண்ணன் பலியானார். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து 2 விபத்துகள் நடந்து 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.