உழவர் சந்தைக்கு அதிக மக்களை வரவழைக்க நடவடிக்கை
திருப்பத்தூர் உழவர் சந்தைக்கு அதிக மக்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
உழவர் சந்தையில் ஆய்வு
திருப்பத்தூர் உழவர் சந்தையில் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள கடைகள், காய்களை இருப்பில் வைக்கும் குளிரூட்டப்பட்ட அறை, காய் கழிவுகளை உரமாக மாற்றும் எந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் உழவர் சந்தை வளாகத்தில் ரூ.84 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் விவசாயிகளுக்கான பயிற்சி கட்டிட கட்டுமான பணியையும் பார்வையிட்டார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
அதிக மக்களை
இந்த சந்தையில் சாதாரண நாட்களில், 12 முதல் 14 டன் காய்கறிகளும், பண்டிகை நாட்களில் 18 டன்னுக்கும் அதிகமான காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, சாதாரண நாட்களில் ஆயிரம் முதல் 1,200 பேர்களும், பண்டிகை நாட்களில் 2 ஆயிரம் வாடிக்கையாளர்கள் காய்கறிகளை வாங்கிசெல்கின்றனர். இங்கு உருவாகும் கழிவுகள் இங்கேயே இயற்கை உரமாக மாற்றி, இலவசமாக வழங்கப்படுகிறது. சூரிய மின்சக்தியால் இயங்கும் குளிர்பதன கிடங்கு உள்ளது என்றார்.
தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம், காய்கறிகள் எங்கிருந்து வருகிறது, எத்தனை மணிக்கு உழவர் சந்தை திறக்கப்படுகிறது, வியாபாரம் எப்படி ஆகிறது, என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகளிடம், உழவர் சந்தைக்கு இன்னும் அதிக மக்களை வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்காக வரும் மக்கள் குறைதீர்வு நாளில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு முகாம் அமைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
இயற்கை காய் கறிகள்
உழவர் சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவை அதிகரிக்கவும், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிகளவு மக்கள் இங்கு வருவார்கள். விற்பனையும் அதிகரிக்கும். இவர்களின் வாழ்வாதாரமும் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் வேளாண்மை அலுவலர் முருகதாஸ், உதவி இயக்குனர் (தோட்டக்கலை) ஜீவிதா, விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.