கண்டமங்கலத்தில் பரபரப்பு:ஓடும் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்


கண்டமங்கலத்தில் பரபரப்பு:ஓடும் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலத்தில் ஓடும் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

விழுப்புரம்


கண்டமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் சொந்தமாக ஆம்னி கார் வைத்து, ஊர் ஊராக சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த காரை புதுப்பிப்பதற்காக நேற்று புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார். காரில் ஆறுமுகத்துடன் 2 சிறுவர்கள், 2 மூதாட்டிகள் உள்பட 5 பேர் இருந்தனர். விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கார் வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் கார் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் உள்பட 6 பேரும் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கினர். இருப்பினும் இந்த சம்பவத்தில் காரில் சென்ற சிறுவன் அகிலேஷ் (5), சஞ்சனா (9), மூதாட்டி பானு (65) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதற்குள் கார் முழுவதுமாக எரிந்து உருக்குலைந்து போனது.இதற்கிடையே தீக்காயம் அடைந்த 3 பேரும் மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காரில் எலக்ட்ரிக் வயர் உராய்வால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார். ஓடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தால் கண்டமங்கலம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story